Kalki 05.09.2010
Designed & Hosted by
 

 பாதுகாப்பைப் பணயம் வைக்கும் மசோதா!

அணு ஆலை விபத்துகள் - நஷ்டஈடு தொடர்பான மசோதா நாடாளுமன்ற விவாதத்துக்கு வந்துவிட்டது. அதை நிறைவேற்ற மத்திய அரசு எல்லாவித முயற்சிகளையும் மேற்கொள்ளும். இதற்கிடையில் பா.ஜ.க. ஓரிரு சொல் திருத்தங்களைக் கோருவதும் அவற்றைச் செய்வது போல் செய்துவிட்டு, வேறு திருத்தங்கள் மூலம் மசோதாவின் உள்நோக்கத்தை ஆளுங்கட்சி பத்திரப்படுத்திக் கொள்வதுமாக ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இங்கு நிறுவப்படும் அணு ஆலைகளில் விபத்து நடந்தால், அவற்றில் பங்குதாரராகவோ அல்லது ஆலைக்குரிய உபகரணங்கள், மூலப்பொருள்கள் விற்கும் சப்ளையராகவோ ஈடுபட்டுள்ள அயல்நாட்டு நிறுவனங்களுக்குப் பொருளாதார, தார்மிகப் பொறுப்புகள் இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த மசோதா! இப்படி ஒரு மசோதாவை இதுவரை எந்த நாடாவது விரும்பி ஏற்றுக் கொண்டிருக்குமா! நமது ஆட்சியாளர்கள் இதை ஏற்று நாட்டைப் பணயம் வைக்கத் துணிந்துவிட்டனர் என்றால் என்ன காரணம்?

அணுமின் உற்பத்திக்கான உபகரணங்கள், மூலப்பொருள்கள் இந்தியாவுக்குத் தரவேண்டுமானால், இத்தகைய மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்கா வற்புறுத்துகிறது! போபால் விஷவாயு விபத்திலிருந்து பாடம் கற்று, அமெரிக்கா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியாவை இப்படி நிர்ப்பந்திக்கிறது; இந்தியாவோ போபால் பயங்கரத்தால் பாடம் கற்று, உரிய தருணத்தில் விழித்துக் கொள்ளாமல் சோப்ளாங்கித்தனமாக அமெரிக்க நிர்ப்பந்தத்துக்கு அடிபணிகிறது!

அணுமின் ஆலைகள் மூலமாக மட்டுமே நம் நாட்டின் மின் பற்றாக்குறையைத் தீர்க்க முடியும் என்கிற தவறான நம்பிக்கையின் காரணமாகவே இந்த இக்கட்டு எழுந்துள்ளது. அமெரிக்க (மற்றும் இதர நாடுகளின்) யுரேனியத்தை நம்பாமல் இந்தியாவில் ஏராளமாக் கிடைக்கும் தோரியத்தைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யலாம். இதற்கான தொழில்நுட்பம் இங்கு ஏறத்தாழ கச்சிதப்படுத்தப்படும் நிலையில் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்தத் திசையில் கூடுதல் கவனமும் ஆய்வும் அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டால், வேறு எந்த நாட்டிடமும் கையேந்தத் தேவை இராது; நமது பாதுகாப்பையும் உரிமைகளையும் விட்டுக் கொடுக்க அவசியம் ஏற்படாது.

இதைவிடவும் மேலான நிலை, அணுசக்தி சார்ந்த தொழில்நுட்பங்களையே மெள்ள மெள்ள கைவிட்டு, மின்உற்பத்திக்கு மாற்று முறைகளை நாடுவதுதான். சூரிய சக்தி, இயற்கை எரிபொருள் போன்றவைதாம் உண்மையில் ‘கிளீன் எனர்ஜி’. ஆனால் நமது அரசோ பேரபாயம் மிக்க கழிவுகளை வெளியேற்றும் அணுமின் சக்தியை ‘கிளீன் எனர்ஜி’ என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது! இவ்வாலைகளில் விபத்துகள் நேர்ந்தால், தலைமுறைகளைக் கடந்த கடும் பாதிப்பு இருக்கும்! அதனால்தான் அமெரிக்கர்கள் தங்கள் நாட்டில் அணு ஆலைகள் நிறுவப்படுவதை எதிர்க்கின்றனர்.

இந்திய மக்களுள் பெரும்பான்மையினர் இப்பிரச்னை குறித்து விவாதிக்கவோ எதிர்ப்பு தெரிவிக்கவோ அறியாத எளியவர்கள்தான்; அதற்கான நேரம்கூட இல்லாமல் வயிற்றுப் பிழைப்புக்காக உழைக்கும் ஏழைகள்தான். அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள அரசே அவர்களைப் பணயம் வைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது!

முழுமையாய் வாசித்து மகிழ சந்தா செலுத்தி
கல்கி / மங்கையர் மலர்  வாங்குங்கள்.

 
July 4 Nadantha Muslimgalin Ma..... - Nazeer Ahamed, Dammam Saudi Arabia, 7/10/2010
Rajapakshevin indhiya vijayath..... - S.KANNAN, Neyveli, 6/19/2010
NOW WE KNOW WHO IS MERCHANT OF..... - r.ramani, erode, 6/17/2010
The union and state govt, Supr..... - N.Ramamurthy, chennai, 6/16/2010
"...Neethithaan kidaikkavillai..... - viyarajan, Chennai, 6/14/2010

Kalki, Mangayar Malar, Gokulam Tamil, Gokulam English are trademarks of:
Bharathan Publications (P) Limited.
(C) 2003-2009, Bharathan Publication (P) Limited.
All rights reserved.
Bharathan Publications (P) Limited.
Kalki Buildings
47NP, Jawaharlal Nehru Road, Ekkaduthangal,
Chennai, India, Pin: 600 032.
Phone: 91-44-43438888 (30 lines)
Fax: 91-44-4343 8899
To advertise, contact marketing@kalkiweekly.com